×

திருக்கழுக்குன்றம் அருகே தேசுமுகிப்பேட்டையில் கழிவுநீர் குளமாக மாறிய வெள்ளைக்குளம்

திருக்கழுக்குன்றம், மார்ச் 11:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேசுமுகிப்பேட்டை, செங்கல்பட்டு செல்லும் சாலையில் வெள்ளைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இந்த குளத்தின் நீரை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தினர். அந்த நேரத்தில் தூய்மையாக இருந்த இக்குளம் காலப்போக்கில்  அசுத்தம் நிறைந்த குளமாக மாறியுள்ளது.இந்த குளத்தின் கரைப் பகுதியில் வசிப்பவர்கள், மட்டுமின்றி குளத்தைச் சுற்றி வசிப்பவர்களும், தங்களது வீட்டு கழிவுகளை இந்த குளத்தில் வீசுகின்றனர். நீர்வரத்து கால்வாயிலும்  கழிவுநீர் விடப்படுவதால் குளத்தின் தன்மை மாறி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தின் நீரும் நிறம் மாறி சாக்கடை போல் காட்சியளிக்கிறது.  இதனால் அவ்வழியாக செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது.

மேலும் குளத்தின் தண்ணீரில் கலந்துள்ள கழிவுகளால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல், விஷ காய்ச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் பாரம்பரியமான குளத்தை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள “வெள்ளைக்குளம்” பாரம்பரியமான குளமாகும். இந்த இடத்தின் பஸ் நிறுத்தத்தின் பெயரே வெள்ளை குளம் பஸ் நிறுத்தம்) காலப்போக்கில் இந்தக் குளத்தின் தன்மை மாறிப் போய் இந்தக் குளத்து நீர் சாக்கடை போன்று காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகமும் இக்குளத்தை சுத்தம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

Tags : pond ,Tirukkamkulam ,Deshumukipettai ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்