×

தமிழக அரசு உத்தரவை ஏற்க மறுப்பு ஐடி கார்டு அணியாத ஊழியர்களுடன் தலைமை செயலக போலீசார் வாக்குவாதம்

சென்னை: அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த உத்தரவை பலர் பின்பற்றுவதில்லை. இதனால் சென்னை, தலைமை செயலகத்தில் அடையாள அட்டை அணியாத ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் நிலை உள்ளது.தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா கடந்த மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி இருந்த அறிக்கையில் ஊழியர்கள் ஐடி கார்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த உத்தரவை ஏற்று, சென்னை தலைமை செயலகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து பணிக்கு வருகிறார்கள்.

மேலும், தலைமை செயலகத்தின் நுழைவாயிலில் உள்ள போலீசார் அடையாள அட்டை இல்லாத அரசு ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் நிலை உள்ளது.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசு உத்தரவை அரசு ஊழியர்களே மதிப்பதில்லை. இனியாவது அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். அப்படி அணியாமல் பணிக்கு வரும் ஊழியர்கள் மீது அந்தந்த துறை தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Tags : Tamil Nadu ,government ,police officers ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...