×

7 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை:காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் நாடாளுமன்ற கூட்ட தொடரின்போது பாஜவுக்கு எதிராக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை, டி.எச்.ரோடு, தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்பியுமான வசந்தகுமார் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
அப்போது, பிரதமர் மோடி, அமித்ஷாவின் உருவ பொம்மைகளுக்கு எலும்புகூடு மாலை அணிவித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வசந்தகுமார் எம்பி பேசுகையில், ‘‘டெல்லி வன்முறை சம்பவம் குறித்து பேச காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஜனநாயக வழியில் முயற்சிசெய்தோம். அதற்கு அனுமதிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனுமந்த் ராவ் சோனியா காந்தியை அவதூறாக விமர்சனம் செய்தார். நாங்கள் அதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டோம்.

காங்கிரஸ் உறுப்பினர் ரம்யா என்பவர் அமித்ஷாவிற்கு எதிராக கையில் பதாகை வைத்திருந்ததால், அவரை பாஜ உறுப்பினர் காலால் எட்டி உதைத்தார். இந்த செயலில் சபாநாயகருக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவர் 2 நாட்கள் சபைக்கு வரவில்லை. அமித்ஷா உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட இடைக்கால சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். வழக்கமாக, ஒருநாள் சஸ்பெண்ட் செய்வார்கள். அல்லது வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்வார்கள். ஆனால் ஏப்ரல் 1ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதை வாபஸ் பெறும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். மோடி இதுசம்மந்தமாக சபையில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட தலைவர் சிவராஜசேகர், மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், சிரஞ்சீவி, மகளிரணி தலைவர் ஜான்சிராணி, வட சென்னை மாவட்ட பொருளாளர் டில்லிபாபு, நவீன், பெரம்பூர் நிஷார், பாபுசுந்தரம், நடிகர் ராஜன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : MPs ,Congress ,government ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...