×

கொடுங்கையூர் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் சுகாதார கேடு

பெரம்பூர்: சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், காவல் நிலைய நுழைவாயில், சாலையோரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை முறைப்படி ஏலம் விடுவதற்கு நடைமுறை சிக்கல் அதிகம் உள்ளதால், ஆண்டுக்கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்கள் புதர்மண்டி விஷ ஜந்துக்கள் வசிப்படமாக மாறியுள்ளன. மேலும், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பறிமுதல் வாகனங்களை அதே பகுதியில் உள்ள காலி இடத்துக்கு மாற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனையடுத்து, அவசர அவசரமாக காவல் நிலையங்களில் இருந்த பறிமுதல் வாகனங்கள் அகற்றப்பட்டன. அதன்பின்பு அந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் காற்றில் பறக்கவிட்டனர். தற்போது சென்னையில் பல காவல் நிலையங்களில் இதுபோன்ற வாகனங்கள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் 35வது வார்டுக்கு உட்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர் 6வது பிரதான சாலையில், கொடுங்கையூர் காவல் நிலையம் பின்புறம் பறிமுதல் கார்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்து துருப்பிடித்து எதற்கும் உதவாத வகையில் உள்ளன. இந்த பகுதியில் வாகனங்கள் இடையே குப்பை குவிந்து காணப்படுகிறது. இவற்றில் தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

 சமீபத்தில், அந்த பகுதியில் சாலை பணி மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு லாரியை நிறுத்தி வைத்ததால் புதிய சாலை அமைக்கும்போது அந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு சாலை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு பயன்படாத வாகனங்களால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் சாலை மற்றும் நடைபாதை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : police station ,Kodungaiyur ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...