×

பல்லாவரம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து மனைகளாக விற்க முயற்சி: பொதுமக்கள் திரண்டதால் ஆசாமிகள் ஓட்டம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பிள்ளையார் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலம் (பழைய சர்வே எண்.210/2 மற்றும் புதிய சர்வே எண் 371/1) உள்ளது. 2840 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த இந்த குட்டையானது, போதிய பராமரிப்பு இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர், கடந்த சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக லாரிகளில் மண் கொண்டு வந்து இந்த குட்டையை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். குட்டை முழுவதும் மண் நிரப்பும் பணி நிறைவடைந்ததும், அதனை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நோக்கில், எல்லை கற்கள் மற்றும் குட்டையை சுற்றிலும்  தடுப்பு வேலிகள் அமைத்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு, அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலத்தை எப்படி தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்யலாம் என ஆக்கிரமிப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘‘இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது,’’ என்றனர். அந்த ஆவணத்தை காண்பிக்கும்படி பொதுமக்கள் கூறியதால், இதோ எடுத்து வருகிறோம், என கூறிவிட்டு அங்கிருந்து நைசாக சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அவர் நேரில் வந்துகூட பார்வையிடவில்லை, என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது, நீர்நிலைகள் அனைத்தும் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதி, பல இடங்களில் பொதுமக்களே தங்களது சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர். அரசும் தனது பங்கிற்கு பல ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள பல ஏரி, குளங்களை தூர்வாரியது.
அதன் பலனாக கடந்த மழைக்காலங்களில் பெய்த மழையால், தற்போது தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் ஓரளவு நீர் நிறைந்து  காட்சியளிக்கிறது.
இவ்வாறு நீர்வளத்தை காக்க ஒட்டு மொத்த தமிழகமே முனைப்பு காட்டி வரும் இந்த வேளையில், பொழிச்சலூரில் மட்டும் விதிவிலக்காக, ஒரு சில தனி நபர்கள், தங்களது சுய லாபத்திற்காக, இதுபோன்று தொடர்ந்து அரசு புறம்போக்கு நீர்பிடிப்பு நிலங்களை ஆக்கிரமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால், இது ஒரு தொடர் கதையாகவே நடந்து வருகிறது. பொழிச்சலூரில் உள்ள குட்டை புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீட்டு மனைளாக விற்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக, மண் கொட்டி சமன் செய்து, தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, அந்த இடம் தங்களுடையது என்கின்றனர். இதுபற்றி பல்லாவரம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தால், கண்டும் காணாமல் இருக்கிறார். இதனால், இந்த ஆக்கிரமிப்பில் அவருக்கும் தொடர்பு உள்ளதோ என சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : state land ,public ,Pallavaram ,Asami ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...