×

கரூர் சுங்க கேட்- மில்கேட் வரை சென்டர் மீடியனில் வர்ணம் பூச வேண்டும்

கரூர், மார்ச் 11: கரூர் சுங்ககேட் முதல் மில்கேட் வரை சென்டர் மீடியனில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வர்ணம் பூச வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் வெங்கல்பட்டி பகுதியில் இருந்து சுங்ககேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, தாந்தோணிமலை வரை சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்தன.ஆனால், ஆபத்தான வளைவு பாதை கொண்ட மில்கேட் பகுதியில் இருந்து சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டன. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் மில்கேட் முதல் சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக மில்கேட் முதல் சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் வர்ணம் பூசப்படாத நிலையில் உள்ளதால் விபத்து நடைபெற வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.எனவே, இந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் தடுப்புச் சுவர் பகுதியில் வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Customs Gate - Milkgate ,
× RELATED கணக்கப்பிள்ளைபுதூர்- காமக்காபட்டி...