×

திருவண்ணாமலையில் தொழில் வரியைவிட குப்பை வரி அதிகம் வரிவசூலில் அடாவடி செயலை கண்டித்து 14ம் தேதி கடையடைப்பு: தாலுகா வியாபாரிகள் சங்கம் முடிவு

திருவண்ணாமலை, மார்ச் 11: திருவண்ணாமலை நகராட்சியின் அடாவடி வரிவசூலை கண்டித்து, வியாபாரிகள் சங்கம் சார்பில் வரும் 14ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், கூடுதல் வரிவிதிப்பு மற்றும் வரி வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் அத்துமீறியும், அடாவடியாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் அடாவடி வரிவசூலை கண்டித்து, திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வரும் 14ம் தேதி திருவண்ணாமலையில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தனகோட்டி, வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் வரிவசூலில் மிகக் கடுமையாக நடந்துகொள்வது அனைத்துத் தரப்பினரையும் வேதனை அடையச்ெசய்துள்ளது. குடிநீர், சொத்து, குப்பை வரி, பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். சொத்துவரியைவிட குப்பை வரி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், ஆம்பூர் போன்ற நகராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குப்பை வரியை ஒப்பிட்டு பார்க்கும்போது, பல மடங்கு அதிகமாக திருவண்ணாமலை நகராட்சியில் வசூலிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே முறையிட்டிருக்கிறோம். நகராட்சி ஆணையாளருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னிச்சையாக வரியை அதிகரித்து நிர்ணயித்திருப்பது நியாயமற்றது. அதோடு, வரிவசூலில் ஈடுபடும் ஊழியர்கள், பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் மிக கடுமையாக நடந்து கொள்ளவதும், அத்துமீறியும், அடாவடியாகவும் செயல்படுவதும் வருத்தத்துக்குரியது. எனவே, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வரும் 14ம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். மேலும், கண்டன ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : tax evasion ,Thiruvannamalai ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...