போளூர் பேரூராட்சியில் ₹30 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் திடீர் சிக்கல்: அதிகாரிகள் மெத்தனம் என குற்றச்சாட்டு

போளூர், மார்ச் 11: போளூர் பேரூராட்சியில் ₹30 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போளூர் பேருந்து நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமம் மற்றும் போளூர் நகரிலிருந்தும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சுற்று சுவர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த கால்வாய் ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்டோர் நடைபாதை கடை அமைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, அப்போதைய பேருராட்சி தலைவர் என்.கே.பாபு முயற்சியால் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், சில மாதங்கள் கழித்து மீண்டும் கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் சிலர் நடைபாதை கடை அமைத்துள்ளனர்.

இதனால், பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் நடைபாதையில் வைத்துள்ள கடைகளால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் கழிவு நீர் கால்வாய் மேல் இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்பவர்கள் நடைபாதையில் செல்லாமல் சாலையில் நடந்து செல்வதால அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கழிவு நீர் கால்வாய்யை சீரமைத்து நடைபாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவிகள் எம்எல்ஏ கே.வி.சேகரனிடம் மனு அளித்தனர். அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் ₹30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள கழிவறையை அகற்ற வேண்டும் என்று பேருராட்சிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர், கழிவு நீர் கால்வாய்யை சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். ஆனால், இதுநாள் வரை பேரூராட்சி நிர்வாகம் கழிவறையை அகற்றாமல் மெத்தனம் காட்டி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக கழிவு நீர் கால்வாயை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி விரைவில் நடைபாதை அமைக்கும் பணியை எம்எல்ஏ கே.வி.சேகரன் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>