×

கடலூர் சில்வர் பீச்சில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கடலூர், மார்ச் 11:  தமிழக அளவில் இரண்டாவது பெரிய கடற்கரை என்ற பெருமை பெற்றது கடலூர் வெள்ளிக்கடற்கரை. அரசு சுற்றுலாதலமாகவும் அறிவித்துள்ளது. நாள் தோறும் ஏராளமானோர் கடற்கரையை  கண்டு களித்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கடற்கரை களை கட்டி காணப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த கடற்கரையில் மாசி மகத்திருவிழா நடந்தது. கடற்கரையிலும் கடற்கரை சாலை வழிநெடுகிலும்  நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாழைப்பழம், கரும்பு ஆகியனவும் ஏலம் விடப்பட்டன. பொழுது போக்கு அரங்குகளும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தன. இரு தினங்களில் இங்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். உற்சவமூர்த்திகள் கடலில் தீர்த்தவாரியின் போது பக்தர்களும் புனித நீராடி தங்கள் பழைய துணிகளை கடலில் கழற்றி விட்டனர். மேலும் இரு தினங்களிலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோருக்கு இக்கடற்கரையில் புனித நீராடி  புரோகிதர்கள் மூலம் திதி அளித்தனர்.மாசி மகம் முடிந்த நிலையில் நேற்று காலை கடலூர் சில்வர்பீச் கடற்கரை குப்பை காடாக காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள், சாப்பிட்டு போடப்பட்ட பேப்பர் மற்றும் மட்டை பிளேட்டுகள், கரை ஒதுங்கிய துணிகள் என காட்சி அளித்தது. மீதமடைந்த உணவு பொருட்கள் ஆங்காங்கே கொட்டி கிடந்தன. புரோகிதர்கள் விட்டுச்சென்ற காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களும் சிதறி கிடந்தன.  இந்நிலையில் கடலூர் பெருநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்  கடற்கரையை துப்புரவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். பல டன் குப்பைகளை அள்ளி எடுத்துச்சென்றனர். இருந்த போதிலும் ஆங்காங்கே கடற்கரை குப்பை கூளங்களுடன் காணப்பட்டது. இது போல் கடற்கரை சாலை வழிநெடுகிலும் கரும்பு சக்கைகள்  உள்ளிட்ட குப்பைகள் குவிந்து கிடந்தன. எனவே துப்புரவு பணியை விரைந்து துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cuddalore Silver Beach ,
× RELATED கடலூர் சில்வர் பீச்சை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி அமைக்க வேண்டும்