×

துர்நாற்றம் வீசும் கெடிலம் ஆறு

கடலூர், மார்ச் 11:  புராணங்களில் கங்கைக்கு இணையான புனித நதியாக கடலூர் கெடிலம் ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஆறு ஆலை கழிவுகள், மருத்துவமனை, வணிகநிறுவனங்கள், தொழிற்சாலை கழிவுகளால் தன்பெருமையை இழந்து சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது.  இது மட்டுமின்றி  கடலூர் கெடிலம் ஆற்றில் சுமார் 10 கி.மீ. தூரம் வரை கடல்நீர் புகுந்து உப்பங்கழியாக காட்சி அளிக்கிறது. கெடிலம் ஆற்றில் நகரின் கழிவுநீர் மற்றும் குப்பை கூளங்கள் கலப்பதால் ஏற்கனவே மாசுபட்டு கொண்டு இருக்கிறது. தற்போது கடந்த  ஒரு வாரமாக  கடலூர் கெடிலம் ஆறு மாசுபடுத்தப்பட்டு  துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆற்றில் எரிசாராய ஆலை கழிவுகள் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.  

இந்நிலையில் தனியார் எரிசாராய ஆலையின்  கழிவுகள் கெடிலம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்று நீர் கருப்பு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதாக கரையோரங்களில் வசிக்கும்  பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து எரிசாராய ஆலைகழிவுகள் திறந்து விடப்பட்டுக்கொண்டு இருப்பதால்  கடலூர் நகரின் மையப் பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்று நீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஆற்றின் கரையோர நகர பகுதிகளில் சுகாதாரம் சீர்குலைந்துள்ளது. கெடிலம் ஆறு மாசுபட்டதால் உப்பங்கழி பகுதியில் மீன்கள் வாழ முடியாமல் இறந்து விடுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். ஆற்றில் கலக்கப்படும் கழிவுகள் கடலுக்குள் செல்வதால், கடல் வளமும் பாதிக்கப்படுகிறது.  இது குறித்து  மாவட்ட நிர்வாகம்  கடலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Tags : Kedelim River ,
× RELATED மண்டபம் கடல் நீரின் நிறம் மாறியதோடு,...