×

மந்தாரக்குப்பத்தில் மீண்டும் புழக்கத்தில் பிளாஸ்டிக் இலைகள்

நெய்வேலி, மார்ச் 11: நெய்வேலி மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சியின் கீழ் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வர்த்தக ரீதியிலும் மற்றும் அலுவலக பணிகளுக்காக தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மந்தாரக்குப்பத்தில்  சுமார்  20க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் சில ஓட்டல்களில் தயார் செய்யப்படும் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும்  எண்ணெய்  ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பழைய பாத்திரங்களில் இருக்கும் பழைய எண்ணெய்யுடன்  புதிய எண்ணெய்யை கலப்படம் செய்து பயன்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும் தோசைக்கு பயன்படுத்தப்படும் மாவுகளை  பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஐ.எஸ்.ஐ தரமற்ற குடிநீர் பாட்டில்கள், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சாப்பிடுவதற்கு வாழை இலையை பயன்படுத்தாமல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை  மற்றும் பாலிதீன் பேப்பர் வைத்து உணவு பரிமாறப்படுகிறது. பார்சல் கட்டுவதற்கும் பாலிதீன்  பேப்பர்களே  அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இலை  போடப்படும் இடம் தூய்மையற்றும்,  கை கழுவ பயன்படுத்தப்படும் குடங்கள்  பாசி படர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருக்கின்றது.  இது போன்று நோய்களின் பிறப்பிடமாக  ஓட்டல்கள் இருப்பதால், விலை கொடுத்து பொதுமக்கள் வியாதிகளை வாங்கும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேரூராட்சி துறை அலுவலர்கள், சுகாதார துறை அலுவலர்கள் வேடிக்கை பார்த்து வருவதாகவும் இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.  எனவே சுகாதாரமற்ற காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை  செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும்  சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது