×

திருச்செந்தூர் அருகே தனியார் தோட்டத்தில் பழமை வாய்ந்த நந்தி சிலை கண்டெடுப்பு

திருச்செந்தூர், மார்ச் 11: திருச்செந்தூர் அருகே தனியார் தோட்டத்தில் மராமத்து பணிக்காக தோண்டிய போது பழமையான நந்தி சிலையும், சிவலிங்கத்தின் ஆவுடைபாகம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் அருகே சண்முகபுரம் காளியம்மன் கோவில் தெருவில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் மாணிக்கராஜ் என்பவரின் தென்னந்தோப்பு உள்ளது. தற்போது இத்தோப்பில் அவரது மருமகன் சண்முகவேல் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தோப்பில் காய்ந்த தென்னை மரங்களை அகற்றி சீரமைக்கும் பணி நடந்தது. ஜேசிபி மூலம் 5அடி ஆழம் தோண்டிய போது நந்தி சிலை கிடைத்துள்ளது. இருப்பினும் உடனடியாக அதை மற்றொரு பக்கத்தில் தோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து வாட்ஸ் அப்பில் வெளியான தகவலை அடுத்து தாலுகா எஸ்ஐ நம்பியார், விஏஓ செல்வலிங்கம் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் சிலை தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் 150 கிலோ எடையுள்ள அந்த சிலை ஒன்னேமுக்கால் அடி உயரமும், இரண்டே முக்கால் அடி நீளமும் உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தோண்டிய போது சிவலிங்கத்தின் ஆவுடை கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும் நந்தி சிலை குறித்து வருவாய்த்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அந்த இடத்திலேயே விட்டு சென்றதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நந்தி சிலைக்கு  பாஜவினர், இந்து முன்னனியினர் என ஏராளமானோர் மாலை அணிவித்து வழிபட்டனர். மேலும் அவ்விடத்தில் தொல்லியல் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகாரிகள் மெத்தனம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சிலை விஷயத்தில் வருவாய்த்துறையினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் மெத்தனமானமாகச் செயல்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் சிவலிங்கத்தின் ஆவுடை கிடைத்துள்ளதால் லிங்கமும் இருக்க வேண்டும். இங்கு முற்காலத்தில் மணிமண்டபம் இருந்ததாகவும், திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் உள்ள கிணற்றில் உச்சிகால பூஜையின் போது போடப்படும் எலுமிச்சைப்பழம் மணிமண்டபத்தின் அருகிலுள்ள கிணற்றில் மிதக்கும். அதன்பிறகே இங்கு பூஜைகள் நடைபெறும். இதுகுறித்து முன்னோர்கள் ஏற்கனேவே கூறியுள்ளனர். எனவே, சிலை குறித்து உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு பழமையான விஷயங்கள் தெரியவரும். எனவே, இதுவிஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் ெசலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Nandi ,garden ,Thiruchendur ,
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு