×

இளம்வயதில் திருமணம் கூடாது உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பெண்கள் தயாராக வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 11:  புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது, இதனை சந்திக்க பெண்கள் தயாராக இருக்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது புதுச்சேரி தூய்மையாக உள்ளது. இதற்கு சுவச் பாரத் ஊழியர்களும், நகராட்சி ஊழியர்களும்தான் காரணம். புதுச்சேரியில் மட்டும்தான் இரவிலும் தூய்மைப்பணி நடைபெறுகிறது. மேலும் 2 முறை தூய்மைப்பணி செய்யப்படுவதால்தான் தூய்மையாக இருக்கிறது.  வெளிமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பலவற்றில் பலமாக உள்ளது. இதை என்னால்தான் கூற முடியும். ஏனென்றால் நான் வெளிமாநிலத்தில் இருந்து வந்திருக்கிறேன். முதலில் புதுச்சேரி பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது. இங்குள்ள கலாச்சாரமும், சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
அடுத்து பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், புதுச்சேரியில் கல்வி கற்றோர் அதிகமாக இருக்கின்றனர். அதுபோல் கிராமப்புற பெண்களாக இருந்தாலும், நகர்ப்புற பெண்களாக இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்கே அதிகம் செலவிடு
கின்றனர்.

புதுச்சேரியில் சுகாதாரம் சிறப்பாக இருப்பதோடு, பெண்கள் குண்டாக இல்லாமல், உடல் வலிமையுடன் உள்ளனர். முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் கசிவின்றி செலுத்தப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் அங்கன்வாடிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பெண்களையும், குழந்தைகளையும் சிறந்த முறையில் பராமரிக்கின்றனர். மேலும் காவல்துறையில் உள்ள பெண்கள் தகுதியின் அடிப்படையில் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகின்றது. எனவே, பெண்கள் ஏதேனும் ஒரு தொழிலில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கி சுயமாக தங்கள் காலில் நிற்க வேண்டும். இதற்காக வேலை வாய்ப்புத்துறை, தொழிலாளர் துறையை பெண்கள் அணுகலாம். இல்லையென்றால் ராஜ்நிவாஸில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் என்னை சந்தித்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகாலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.  புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அதிக நிதி கிடைக்கும். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பெண்கள் தயாராக வேண்டும். இது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் சமூக நலத்துறை பெண்களிடம் நடத்த வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்காதீர்கள். படிக்க வைத்து பெண்களை சுய காலில் நிற்க செய்யுங்கள். ஆண் பிள்ளைகளை பொறுப்புடன் வளருங்கள்.  பெண்கள் வேலைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளும் ஆண்களிடம் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Women ,elections ,
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்