×

பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 11:  பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மிக குறைந்த வருமானத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் ஆட்சேபனை இல்லை என கடந்த 2014ம் ஆண்டில் அப்போதைய சுகாதாரத்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து புதுவை சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்போது இந்த சங்கம் மற்றும் என்ஆர்எச்எம் ஊழியர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பை இன்னும் செயல்படுத்தவில்லை.

இதையடுத்து இக்கோரிக்கையை வலியுறுத்தி பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் நேற்று முன்தினம் தலைமை தபால் நிலையம் முன் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து நேற்று மாலை 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தலைவர் வாணிதாசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், தேவன், வசந்தராஜா, சவுந்தர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Workplace ,
× RELATED விமான நிலையங்களில் காலிப் பணியிடம்