×

மானூர் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்கியது

மானூர் மார்ச் 11: மானூர் தாலுகா அலுவலகம் நேற்று முதல் மானூர் களக்குடி சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் தனது சேவையை துவங்கியது. நெல்லை தாலுகாவிலிருந்து மானூர், தாழையூத்து, கங்கைகொண்டான் ஆகிய 3 பிர்காக்களை தனியாக பிரித்து மானூர் தாலுகா கடந்த 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் கங்கைகொண்டான் மக்கள் நெல்லை தாலுகாவிலேயே இடம் பெற விரும்பியதால் கங்கைகொண்டான் மீண்டும் நெல்லையில் இணைக்கப்பட்டது. இதனிடையே நெல்லையை பிரித்து தென்காசி தலைமையிடமாக கொண்டு தென்காசி தனி மாவட்டமாக அக்டோபர் 12ம் தேதி தமிழகஅரசு ஆணை பிறப்பித்து அறிவித்தது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள வன்னிகோேனந்தல் பிர்கா மானூருடன் இணைக்கப்பட்டு மானூர் தாலுகா 3 பிர்காக்களாக 32 கிராமங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

மானூர் தாலுகா அலுவலகம் மானூர் பஜாரிலுள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் மானூர் பஜாரிலுள்ள களக்குடி சாலையில் ரூபாய் 2.62 கோடியில் நவீன வசதிகளுடன் 2 தளங்கள் அமைக்கப்பட்டு கட்டிட பணி நடந்து வந்தது. புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் வட்டாட்சியர் அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கணினி அறை, ஆண்களுக்கு, பெண்களுக்கு என பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் தனித்தனியே கழிவறைகளும், முதல் தளத்தில் பதிவேடுகள் வைப்பறை, கூட்ட அரங்கு மற்றும் நில  அளவு பிரிவுகள் அறை மற்றும் கீழ்தளத்தை போல முதல் தளத்திலும் கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன.

புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை கடந்த 13.01.2020 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து இப்புதிய கட்டிடத்தில் விடுபட்டிருந்த கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் நேற்று முன்தினம் வரை தாலுகா அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று முதல் களக்குடி சாலையில் புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட துவங்கியது. இதில் தரை தளத்தின் கீழ் பகுதியில் வருவாய் பொது அலுவலகமும் மேல் பகுதியில் சமூகநல துறை சார்ந்த அலுவலகமும் முதல் தளத்தில் நில அளவிடல் துறை சார்ந்த அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் போதுமான வசதிகள் உள்ளதால் அலுவலக ஊழியர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

Tags : Manoor ,taluk office ,building ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது