×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம், மார்ச் 11: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்று அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று, மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.சேலம் ராமகிருஷ்ணாரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியூசி சம்மேளன பொதுச்செயலாளர் முருகராஜ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொமுச தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலைமறியல், சிறை நிரப்பும் போராட்டம், ஸ்டிரைக் போன்றவற்றை நடத்துவோம்,’’ என்றார். இதில், போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகி மனோகரன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தையொட்டி அஸ்தம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : Transport workers ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்