×

உலிபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

சேலம், மார்ச் 11: சேலம் மாவட்டம் உலிபுரத்தில் இன்றும், ஏத்தாப்பூரில் வரும் 14ம் தேதியும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த உலிபுரத்தில் இன்று (11ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதேபோல், வரும் 14ம் தேதி, பெத்தநாய்க்கன்பாளையம் ஏத்தாப்பூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவற்றை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, போட்டிக்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், காளை அழைத்து வரப்படும் பாதை தடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், ஆர்டிஓ துரை,  கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், டிஎஸ்பி ராஜூ, தாசில்தார் சிவக்கொளுந்து மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், உலிபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...