×

வாக்காளர்கள் அதிகம் இருந்தும் மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டுகள் எண்ணிக்கை குறைப்பு

நெல்லை, மார்ச் 11: மேலப்பாளையம்  மண்டலத்தில் வாக்காளர்கள் அதிகம் இருந்த போதும் 10 வார்டுகள், 7 வார்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசியல்  கட்சியினர் மாநில தேர்தல் ஆணையரிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
நெல்லை  மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை தொடர்பாக அரசியல் கட்சிகள்,  பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் பேசியதாவது: நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் நகராட்சிகள்,  தச்சநல்லூர் பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து நெல்லை மாநகராட்சி 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  அப்போது பிரிக்கப்பட்ட வார்டுகள், இதுவரை மாற்றப்படவில்லை. தற்போது ஒரு  வார்டில் 12 ஆயிரம், 10 ஆயிரம், 6 ஆயிரம், 7 ஆயிரம் என வாக்காளர்கள் வரும்  வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் மண்டலத்தில் இருந்த 10 வார்டுகள் தற்போது 7  வார்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் 10 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் வித்தியாசம் நிறைய  இருக்கிறது. ஒரு சில வார்டுகளில் அதிக வாககாளர்களும், ஒரு சில வார்டுகளில்  குறைந்த வாக்காளர்களும் உள்ளனர். மக்களுடைய வசதிக்காகத் தான் வார்டுகள்  பிரிக்கப்படுகிறது என மறு வரையறை ஆணையர் கூறினார். எனவே மக்கள்  பிரநிதிதிகள், எம்.பி. எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அமர்ந்து  வார்டுகளை முறையாக பிரிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஹயாத் முகமதுவும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

அதிமுக  வக்கீல் பிரிவு செயலாளர் வி.டி.திருமலையப்பன் பேசுகையில், ‘வார்டுகள் இன  சுழற்சி முறையாக செய்யாமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல்தான்,  தற்போதும் உள்ளது. குறிப்பாக 12, 17, 40 ஆகிய வார்டுகள், அதே இன  சுழற்சியில் தான் உள்ளது. இதை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்  என்றார். பா.ஜ. மாவட்ட  பொதுச் செயலாளர் சுரேஷ் பேசுகையில், ‘‘ மேலப்பாளையம் மண்டலத்தில் இருந்த  குலவணிகர்புரத்தை 3 வார்டுகளாக பிரித்து, ஒரே வார்டை மட்டும் தச்சநல்லூர்  மண்டலத்தில் இணைத்து விட்டனர். இந்த வார்டை மேலப்பாளையம் மண்டலத்துடன்  இணைக்க வேண்டும் என்றார்.

மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்  கல்லத்தியான் பேசுகையில், ‘‘ 11வது வார்டு ஏற்கனவே பாளை மண்டலத்தில்  இருந்தது. தற்போது தச்சநல்லூர் மண்டலத்தில் சேர்த்து விட்டனர். இதனால் மக்கள் 2 கி.மீ., தூரத்திற்கு பதிலாக 12 கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளது. இது  தொடர்பாக அளித்த மனுவை கலெக்டர் பரிசீலித்து மாநகராட்சி கமிஷனர் நேரில்  வந்து ஆய்வு செய்துள்ளார். இந்த வார்டை பாளை மண்டலத்துடன் சேர்க்க ஏற்பாடு  செய்வதாக கூறியுள்ளார். அதற்காக கலெக்டர், கமிஷனருக்கு நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.’’ என்றார். பகுஜன்சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன்  பேசுகையில், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் பொதுமக்கள் மத்தியில்  பிரச்னை உருவாகும் வகையில் தனி வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதை முறையாக  பிரிக்க ஆணையர் ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றார்.

கூட்டத்தில் மாநில  தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி,  முதன்மை தேர்தல் அலுவலர்கள் ஆனந்தராஜ் (ஊரகம்), சரவணன் (நகர்ப்புறம்),  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்த்ராச்சலம், நெல்லை மாநகராட்சி  கமிஷனர் கண்ணன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் காளிமுத்து,  பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், உதவி இயக்குநர் (பஞ்.,)  அருணாசலம், நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், நேர்முக உதவியாளர் (ஊரக  வளர்ச்சி) முத்து இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : zone ,voters ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...