×

14வது ஊதிய ஒப்பந்தம் வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நெல்லை, மார்ச் 11: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை  விரைந்து தொடங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நெல்லை மண்டல தலைமை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்் நடந்தது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் முடித்து 6 மாதங்களை  கடந்த பின்னரும் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காமல் அரசு காலம் கடத்தி வருகிறது.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். கிரேடு பே சரிசெய்து 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 1-9-2019 முதல் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்க வேண்டும். ஓய்வுகால பணபலன்கள், அகவிலைப்படி நிலுவைத் தொகை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1998 ஒப்பந்தப்படி அனைவரையும் பென்சன் திட்டத்தில் இணைத்து அரசே பென்சன் வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு தொமுச அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ ஜோதி, தொமுச முருகேசன், ஏஐடியூசி குமாரசாமி, ஐஎன்டியூசி ராமசாமி, எச்எம்எஸ் பாலசுப்பிரமணியன், பணியாளர் சம்மேளனம் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியூ மாநில குழு உறுப்பினர் பெருமாள், காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தொமுச முருகன், மகாவிஷ்ணு, இன்பராஜ், சிஐடியூ காமராஜ், வின்சென்ட், மணி, ஏஐடியூசி உலகநாதன், சடையப்பன், சுப்பையா, ஐஎன்டியூசி புஷ்பராஜ், சவுரி ராஜன், முத்துகிருஷ்ணன், எச்எம்எஸ் சுப்பிரமணியன், மைக்கேல் ராஜ், நல்லசிவம், பணியாளர் சம்மேளனம் ராஜா சிங், பேச்சிமுத்து, உத்திரம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர்.  இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.

Tags : Transport workers ,protest ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...