×

அனுமதியை தவறாக பயன்படுத்தும் சாய பட்டறைகள் கண்காணிப்பு

பள்ளிபாளையம், மார்ச் 11: அனுமதியை தவறாக பயன்படுத்தும் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கண்காணித்து அவற்றை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாயக்கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றும் சாயப்பட்டறைகளுக்கு மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளது. இதன்படி பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் அனுமதி பெற்ற 100 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளுக்கு உரிமம் வழங்கப்படும் போது, சாயப்பட்டறையின் தன்மை, சாயமிடும் துணிகள், நூல்கள் விபரம், வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு, கழிவை சுத்தப்படுத்தும் இயந்திரங்களின் தரம் மற்றும் விபரம் போன்றவை பதிவு செய்யப்படுகிறது.அனுமதி பெறும்வரை முறைப்படி செயல்படும் இந்த சாயப்பட்டறைகள் அனுமதிக்கு பிறகு அளவை மீறி அதிகப்படியான சாயக்கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. கடந்த 2 நாட்கள் முன்பு பொதுமக்களின் புகார் அடிப்படையில் பள்ளிபாளையத்தில் இயங்கி வந்த 2 அனுமதி பெற்ற சாயப்பட்டறைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் துணிகளை வெள்ளையாக்கும் பிளீச்சிங் அனுமதியை பெற்று, சாயமிடும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 சாயப்பட்டறைகளுக்கு தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பல சாயப்பட்டறைகளில் 20 ஆயிரம் லிட்டர் அளவிற்கு கழிவுநீர் வெளியாகும் என்ற விபரத்தை கொடுத்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும், சாய பட்டறை உரிமையாளர்கள் நாள்தோறும் 2 லட்சம் லிட்டருக்கு மேல் சாயக்கழிவுகளை வெளியேற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அனுமதி பெறப்பட்ட சாயப்பட்டறைகளில் அனுமதியை மீறி முறைகேடு நடக்கிறதா என குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் சாயப்பட்டறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்ரை மூடி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சாயக்கழிவுகளின் அளவு, சுத்திகரிப்பு நிலையம் இயங்கியதற்கான மின் அளவு போன்றவற்றை கண்டுபிடிக்க டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இதுவரை அதிகாரிகளை ஏமாற்றி வந்த பல சாயப்பட்டறைகள் கலக்கமடைந்துள்ளன.

Tags : dye workshops ,
× RELATED அரசு பள்ளிகளில் அனுமதியை தவறாக...