×

உள்ளாட்சி தேர்தல்குள் சாத்தூர் நகராட்சி எல்லை விரிவாக்கப்படுமா? பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சாத்தூர், மார்ச் 11: சாத்தூர் நகராட்சி 1970ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாகவும் 1983ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்டது.  அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பின்பு, தற்போது வரை சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளை கொண்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி போதிய அளவில் ஏற்படவில்லை. நிப்பு தொழில் அழிவு, தீப்பெட்டி தொழில் எந்திரமயம் உள்ளிட்ட காரணங்களால் சாத்தூர் பகுதி மக்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். நகரின் வளர்ச்சிக்காக எல்லை விரிவாக்கம் தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது ஊராட்சிகள் எதிர்ப்பாலும், அரசியல் தலையீடு காரணமாகவும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. சாத்தூர் நகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்படாததால், கடந்த 35 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் 2ம் நிலை நகராட்சியாகவே சாத்தூர் நகராட்சி செயல்பட்டு வருகிறது. முதல் நிலை நகராட்சியாக தரம் உயராததால், புதிய திட்டங்களும்  கிடைப்பதில்லை, வளர்ச்சித் திட்டங்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.

 சாத்தூர் அருகே உள்ள ஊராட்சிகளான வெங்கடாசலபுரம், சடையம்பட்டி, சத்திரபட்டி, படந்தால், அமீர்பாளையம், என்.ஜி.ஒ காலனி ஆகிய பகுதிகளை நகராட்சியோடு இணைத்து சாத்தூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், 500, 700 வாக்குகள் மட்டுமே உள்ள வார்டுகளில் அரசியல் கட்சியினர் தேர்தலில் எளிதில் வெற்றிபெறுகின்றனர். எல்லை விரிவாக்கத்தை அவர்கள் விரும்பவில்லை என தெரிகிறது. இதனால் சாத்தூர் நகராட்சி புறக்கணிக்கப்பட்டு பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாத்தூர் நகராட்சியின் வருவாயும் குறைந்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி நகராட்சி நிர்வாகத்தால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே பெரும் சிரமமாக உள்ளதாக அதிகாரிகள்  கூறுகின்றனர். எனவே வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.

Tags : elections ,Satur Municipal Boundary ,public ,activists ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...