×

போச்சம்பள்ளி அருகே மோட்டூப்பட்டி ஆற்றில் மணல் கொள்ளை

போச்சம்பள்ளி,  மார்ச் 11: போச்சம்பள்ளி அருகே, மோட்டூப்பட்டி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது வழக்கமாக உள்ளது. இதில் மூட்டையாக கட்டி டூவீலரில் கடத்துவது அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், மோட்டூப்பட்டி, அகரம், மருதேரி, பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் நல்ல மணல் வளம் நிறைந்துள்ளது. அதனால் மணல் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. இதில், கடத்தல் புள்ளிகள் தென்பெண்ணை ஆற்றை குறி வைத்து, பல ஆண்டுகளாக லாரி, டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மணல் கடத்தில் ஈடுபட்ட லாரி மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மணல் கொள்ளையாளர்கள் டிராக்டர், லாரிகளில் மணல் கடத்துவதை தவிர்த்து, தற்போது  டூவீலர்களில் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நெடுங்கல், அகரம், ஆவத்துவாடி, மோட்டுப்பட்டி, மொரசப்பட்டி, மருதேரி, பண்ணந்தூர், அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள   தென்பெண்ணை ஆற்றில் தற்போது மணல் கடத்தல் அமோகமாக நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையார்கள் பகல் நேரங்களில் ஆற்றில் மணலை சிமெண்ட் பைகளில் மூட்டை மூட்டையாக கட்டி  வைத்து, இரவு நேரங்களில் டூவீலர் மூலம் மணலை கடத்தி செல்கிறார்கள்.இதனால் தென்பெண்ணை ஆற்று பகுதி பள்ளதாக்குகளாகவும், பாலைவனமாகவும் வறண்டு காணப்படுகிறது.மேலும் பாலத்தின் கீ்ழ் மணல் அள்ளுவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே நீர்வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வருவாய் மற்றும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : river ,Motutupatti ,Pochampally ,
× RELATED சிவப்பாக மாறிய ஆம்பர்ன்யா நதி!! : ரஷ்ய...