×

மனு கொடுத்த அனைவருக்கும் 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தில் ₹287 கோடி மோசடி நடந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்ததுடன், கலெக்டரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே, மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ₹287 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுத்திட கோரியும், 100 நாள் வேலைக்கு மனு கொடுத்த அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் எனக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிற் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் எத்திராஜ், சுப்பிரமணி, மொளுகு, வேலு, ரத்தினம்மாள், வெங்கடாஜலம், மனோகரன், சுரேஷ்பாபு, இளையராணி, சிந்தாமணி, ருக்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட் செயலாளர் கோவிந்தசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்.ஆஞ்சலாமேரி, சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு 200க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளை புகுத்தி, ஆளும் கட்சியை சார்ந்தவர்களும், காண்டிராக்டர்களும், விவசாயி தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்த 100 நாள் வேலை திட்ட நிதியில் கடந்த 2017-18, 2018-19 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ₹287 கோடி ஊழல் செய்து கொள்ளையடித்துள்ளனர். இந்த தகவல் சமூக தணிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்திட வேண்டும். கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் கந்து வட்டிக்காரர்களிடமும், மீட்டர் வட்டி கொள்ளையர்களிடமும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடமும் சிக்கி தவித்து வரும் ஏழை மக்களின் சுயமரியாதையான வாழ்க்கைக்கு 100 நாள் வேலையை கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உடவடிக்கை எடுத்திட வேண்டும். 100 நாள் வேலையை 250 நாளாக உயர்த்திட வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப ₹600 கூலி வழங்கிடவும், இத்திட்டத்தை நகர்புறங்களுக்கம் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

Tags :
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு...