×

விதிமீறும் வாகன ஓட்டிகள் கம்பத்தில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கம்பம், மார்ச் 11: தடை செய்யப்பட்ட ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ ஒலி எழுப்பகூடிய, வித்தியாசமான ஹாரன் கம்பம் முக்கிய சாலைகளில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. விதிகளை மீறி காதைக் கிழிக்கும் ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க, வாகனங்களில் குறிப்பிட்ட ‘டெசிபல்’ அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள தமிழக எல்லைப்பகுதியான கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து வாகனங்களில், ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி, ஏர்ஹாரன்களை பயன் படுத்துகின்றன. குறிப்பாக, நகரப்பகுதிக்குள் நுழையும் தனியார் பஸ்கள், அதிக வேகத்தில் செல்வதுடன், தொடர்ச்சியாக ஏர்ஹாரனை அலற விட்டு, மக்களை அச்சுறுத்துகின்றனர். இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சமடைகின்றனர். பின்புறமாக வரும் வாகனங்கள் திடீரென ஏர்ஹாரன் உபயோகிப்பதால், டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். எனவே விதிகளை மீறி காதைக் கிழிக்கும் ஏர்ஹாரன் பயன்படுத்துவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த மணி கூறுகையில், அதிகாரிகளின் சோதனையில் ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறைந்த அளவே அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால் தனியார் வாகன ஓட்டுனர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதிகளவில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே அபராத தொகையை அதிகப்படுத்தினால், ஏர்ஹாரன் பாதிப்புகள் குறையும் என்றார்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...