×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்


தர்மபுரி, மார்ச் 11: தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஊதியஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வலியுறுத்தி பாரதிபுரம் பொதுமேலாளர் அலுவலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்ட மண்டல அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடந்தது. பின்னர் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்மபுரி- சேலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலைமறியலால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது. ஒரு கட்டத்தில் பொதுமேலாளர் அலுவலக இரும்பு கேட்டை திறந்து பொதுமேலாளர் அலுவலக வளாகத்திற்குள் தொழிலாளர்கள் நுழைந்தனர். அங்குள்ள மரத்தடியில் நின்றனர். பின்னர் பாரதிபுரம் 60 அடி சாலையில் சாமியான அமைத்து காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தினர். மதிய உணவு சமைத்து அங்கயே சாப்பிட்டனர். இந்த போராட்டத்தில் 1600 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக மண்டல தொமுச தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். தொமுச மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சிஐடியூ தொழிற்சங்க தலைவர்கள் சண்முகம், நாகராஜ், ஏஐடியூசி நாகராஜி, ரமேஷ், ஐஎன்டியூசி தங்கவேல், எச்எம்எஸ் தங்கராஜ், டிடிஎஸ்எப் சரவணன், அம்பேத்கர் தொழிற்சங்கம் பொன்னுசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல தொமுச தலைவர் சின்னசாமி கூறுகையில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில், சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தர்மபுரி மண்டலத்தில் 15 பணிமனைகளில், 920 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 24 மணிநேரமும் போக்குவரத்து கழக பேருந்துகள் கிராமங்கள், நகரங்களை இணைத்து மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மேம்படுத்த பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்ற நல்லபெயரை ஈட்ட போக்குவரத்துகழகங்களின் பங்கு அதிகம். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த காலம் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த செப்டம்பர் மாதமே அரசிடம் கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில், பல்வேறு இனங்களுக்காக பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர்களுடைய பணம் சுமார் 8 ஆயிரம் கோடியை அரசு பேருந்து இயக்கத்திற்கு செலவு செய்து வருகிறது என்றார். போக்குவரத்து தொழலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

Tags : Transport workers ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்