×

தியாகரசனப்பள்ளியில் எருதாட்டம் கோலாகலம்

சூளகிரி, மார்ச் 11: சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில் எருதாட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசன பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாத கடைசியில் எருதாட்டம் நடப்பது வழக்கம். இந்த எருதாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து காளைகள், மாடு பிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், தியாகரசனப்பள்ளி கிராமத்தில் நேற்று எருதாட்ட விழா நடந்தது. இதற்காக நேற்று முன்தினமே பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று காலை, அனைத்து காளைகளுக்கு அங்குள்ள கோயில் முன், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து எருதாட்ட விழா நடந்தது. முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.இதை தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டது. அதில் துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை, 100க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகளை வீரர்கள் அடக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. விழாவை காண சூளகிரி, அளகுபவி,மேடுபள்ளி, எனுேசோணை , மோத்து காணபள்ளி, பங்காநத்தம், கிரணப் பள்ளி, உத்தனபள்ளி, உலகம், மாரண்பள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கண்டு களித்தனர். விழாவையொட்டி சூளகிரி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags : burial ground ,Thiyagarasanapalli ,
× RELATED சூளகிரி அருகே எருதாட்டம் கோலாகலம்