×

பாதுகாப்பு பணிக்காக வெளியூர் பணி சிவகங்கை நகர் பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்களா?

சிவகங்கை, மார்ச் 11:  சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசனில் இருந்து வெளியூர் பாதுகாப்பிற்கு பல நாட்கள் போலீசார் செல்வதால் நகரில் குற்றச்சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசனில், கிரைம் பிரிவு உட்பட 70க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்ற வேண்டும். ஆனால் 60 பேர் வரை பணியாற்றுவதாக பதிவு உள்ளது. இதில் ஏராளமானோர் எஸ்பி அலுவலகப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நிரந்தரமாக உள்ளனர். இவர்கள் தவிர ஸ்டேசனில் பணியாற்றுபவர்கள் சுமார் 25 பேர் மட்டுமே. இவர்களையும் சட்டம் ஒழுங்கு பணியில் முழுமையாக ஈடுபட விடாமல் அவ்வப்போது வெளி மாவட்ட பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.

வட மாவட்டம், தென் மாவட்டம் என எங்கு சிறிய விழா, விசேஷம் என்றாலும் இந்த போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி விடுகின்றனர். அவை தவிர சிவகங்கை மாவட்டத்திற்குள் சாக்கோட்டை, திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி உட்பட வெளியர் நிகழ்ச்சிகளுக்கு சிவகங்கை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். தொடர்ந்து பல நாட்கள் வெளியூர் பாதுகாப்பிற்கு போலீசார் செல்வதால் சிவகங்கை நகரில் பாதுகாப்பு பணி கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிப்படைந்துள்ளன. போலீசார் தெரிவித்ததாவது: பட்டாலியன் போலீஸ், சிறப்பு போலீஸ் என பாதுகாப்பு பணிக்கு என போலீசார் உள்ளனர். ஆனால் வெளி மாவட்டங்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றும் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு தொடர்ந்து அனுப்புகின்றனர். இதுபோலவே சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றும் போலீசாரும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த ஸ்டேசனில் ஏற்கனவே எண்ணிக்கை குறைவாகவே போலீசார் உள்ள நிலையில் அவர்களையும் பல நாட்கள் வெளியூர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பினால் போலீஸ் ஸ்டேசனில் உள்ள பணிகளை யார் பார்ப்பது. இதனால் குற்றச்சம்பவங்களும் அதிகரிக்கிறது. கைது நடவடிக்கை இல்லாததால் குற்றவாளிகளுக்கும் கூடுதல் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே ஸ்டேசன் போலீசாரை அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,police officers ,Sivagangai Nagar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...