×

பெதப்பம்பட்டி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

உடுமலை, மார்ச் 11: குடிமங்கலம் ஒன்றியத்தில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய்களில்  ஏற்படும் உடைப்புகள் உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் தினமும் பல ஆயிரம்  லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 கோடைகாலம் தொடங்கி விட்டால் குடிநீருக்கான தேவை அதிகரித்து விடுகிறது. ஆனால்  போதிய குடிநீர் கிடைக்காத நிலையில் தட்டுப்பாடு ஏற்படுவதும், காலி  குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர் கதையாகவே  உள்ளது. இத்தகைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல  குடிநீர்த்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் சில  அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்  நீடிக்கிறது. அந்த வகையில் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23  ஊராட்சிகளுக்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்யும் வகையில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின்  நோக்கம் பயனற்றதாகிக் கொண்டிருக்கிறது. கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்களில்  ஏற்படும் உடைப்புகள் உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் தினமும் பல ஆயிரம்  லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு குடிநீர் வீணாகும்போது கடைக்கோடி கிராமங்களுக்கு தண்ணீர் சென்று  சேராத நிலை ஏற்படுகிறது.

 இதனால் குடிநீருக்காக 10 நாட்கள் முதல் 15  நாட்கள் வரை காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. மேலும் குடிநீருக்காக  கொதிக்கும் வெயிலில் பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய  நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது கோடைகாலம்  ஆரம்பித்து விட்ட நிலையில் குடிநீர் தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கிராமங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிநீரைவிட  குறைந்த அளவு குடிநீர் விநியோகிக்கப்படுவதால் குடிநீரை அளந்து கொடுக்க  வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை  பெதப்பம்பட்டி சாலையில் பெதப்பம்பட்டி தொலைபேசி நிலையம் அருகே  கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு பல நாட்களாக  சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் குடிநீர்  குளம்போல் தேங்கி பின்னர் அருகிலுள்ள சாக்கடையில் கலக்கிறது. இவ்வாறு  தேங்கியிருக்கும் தண்ணீரை அருகில் வசிக்கும் மக்கள் குடங்களில்  சேகரித்து குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். இதுவே தண்ணீர் தட்டுப்பாடு  தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாகும். மேலும் இந்த சுகாதாரமற்ற குடிநீரை  குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு  பாதுகாப்பான குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதற்கு குடிநீர் குழாய்கள் பராமரிப்பில் அக்கறை  செலுத்துவதும், திட்டமிட்டு முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை  எடுப்பதும் அவசியமாகும். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை  உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Breakdown ,Bethampampatti ,
× RELATED கொரோனா பரிசோதனையிலும் தளர்வுகள்...