×

அமராவதி வட்டக்கிணறுகளில் நீர் இருப்பு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

உடுமலை, மார்ச் 11:  அமராவதி வட்டக்கிணறுகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால், கோடை காலத்தில் பேரூராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடுமலை அருகே உள்ள குமரலிங்கம், சங்கராமநல்லூர், கணியூர், மடத்துக்குளம் பேரூராட்சிகளுக்கு, அமராவதி ஆற்றில் வட்டக்கிணறு அமைத்து, அதில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடை துவங்கிவிட்டதால், அமராவதி அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அமராவதி ஆறும் வறண்டு காணப்படும். இதனால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வட்டக்கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம்.ஆனால், தற்போது வட்டக்கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. குமரலிங்கம் பேரூராட்சிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் வட்டக்கிணறுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. மேலும் திருமூர்த்தி அணை தண்ணீரும் வழங்கப்படுகிறது. தடையின்றி குடிநீர் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது: கோடை துவங்கும்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது வட்டக்கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. கோடை மழையை பொருத்து நீர் இருப்பு நிலவரம் தெரியவரும் என்றனர்.


Tags : basins ,Amaravathi ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம்...