×

மதுரை வரலாற்றில் முதன்முறையாக மாட்டுத்தாவணிக்கு மாறுது அரசு சித்திரை பொருட்காட்சி ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தமுக்கத்தை மூடுவதால் முடிவு

மதுரை, மார்ச் 11: ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக தமுக்கம் மைதானத்தை மூடுவதால், மதுரை வரலாற்றில் முதன்முறையாக மாட்டுத்தாவணியில் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஏப்.25ல் மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய உற்சவமான மே 4ல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், 5ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து அழகர்மலையில் இருந்து எழுந்தருளி மதுரைக்கு வரும் கள்ளழகருக்கு மே 6ம் தேதி விடிய, விடிய தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெற்று, 7ம் தேதி காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவம் நடக்கிறது. வண்டியூர் வரை செல்லும் அழகர் மீண்டும் 9ம் தேதி இரவு தல்லாகுளம் வந்தடையும்போது, அங்கு விடிய விடிய பூப்பல்லக்கு நடைபெறும். இந்த திருவிழா உற்சவங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.

இதனை அடிப்படையாக கொண்டு, தல்லாகுளத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி 50 ஆண்டுகளுக்கு முன்வரை தனியாருக்கு ஏலம் விடப்பட்டு நடைபெற்று வந்தன. திருவிழாவுக்கு வரும் கூட்டம் பொருட்காட்சி நடக்கும் மைதானத்தில் நிரம்பி வழிந்தது. அப்போதெல்லாம் பொருட்காட்சியில் சூதாட்டங்கள் எல்லை மீறின. இதனை தடுக்கும் நோக்குடன் பொருட்காட்சியை அரசு ஏற்று நடத்த தொடங்கியது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறுவதால் சித்திரை பொருட்காட்சியாக 50 ஆண்டுகளாக தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்த மைதானம் மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தமுக்கம் மைதானத்தில் உள்ள கலைஅரங்கினை இடித்து நவீன வடிவில் கட்டவும், புதிதாக கடைகள் கட்டவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த மைதானத்தை மூடி, கலை அரங்கு மற்றும் தோரண வாயில்களை இடிக்க முடிவு செய்துள்ளது. இங்கு மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடக்கிறது. அந்த விளையாட்டு போட்டி முடிந்ததும், மைதானம் மூடப்படுகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சிக்கு மைதானத்தை வழங்க இயலாது என மாநகராட்சி கைவிரித்துவிட்டது. பொருட்காட்சி முடிந்த பிறகு, மைதானத்தை மூடலாம் என்ற யோசனை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு சித்திரை பொருட்காட்சிக்கு தமுக்கம் அருகிலுள்ள காந்தி மியூசிய வளாகம் பரிசீலிக்கப்பட்டது. அந்த இடம் ஏற்றதாக இல்லை என கைவிடப்பட்டது. கே.கே.நகரிலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடத்த திட்டமிட்டும் முடியவில்லை.

இதனால் மாட்டுத்தாவணியில் எம்ஜிஆர் பஸ்நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டுக்கும் இடையே காலியாக கிடக்கும் பெரிய இடத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சிக்கு சொந்தமான இடமாகும். இதனை வாடகை அடிப்படையில் வழங்க மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ளதால் இந்த இடமே பொருத்தம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கர் பரப்புள்ள மைதானம் போன்ற இந்த இடத்தை சீரமைத்து, பொருட்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மாநில அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. மதுரையின் 50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக அரசு சித்திரை பொருட்காட்சி மாட்டுத்தாவணியில் அமைக்கப்படுகிறது.

Tags : government portrait exhibition ,Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...