×

திருமங்கலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருமங்கலம், மார்ச் 11: திருமங்கலம் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில், 20 கிராம மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமங்கலம் அருகே, மேலக்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து பாரைபத்தி வரை நெடுஞ்சாலை செல்கிறது. இதில், மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் மேலக்கோட்டை பிரிவில், ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சார்பில், மேலக்கோட்டையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதன் மூலமாக வாகனங்கள் சென்று வந்தன.

ஆனால், மழைக்காலங்களில் சுரங்கத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுரங்கப்பாதை முழுவதையும் தகரம் மூலமாக மூடி சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனாலும், தண்ணீர் தேங்குவது குறையவில்லை. போடப்பட்ட மேற்கூரையால் சுரங்கப்பாதை பகலில் கூட கும்மிருட்டாக மாறியது. இதனால், பகல் இரவு நேரங்களில் இந்த பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டபடியே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், சுரங்கபாலத்தில் அடிக்கடி நகை பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கத் தொடங்கின. இதனால், பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனேயே சுரங்கப்பாதையில் சென்று வந்தனர்.

இதனை தொடர்ந்து சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மேலக்கோட்டை, கீழக்கோட்டை உள்ளிட்ட 20 கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர்.  இதன் எதிரொலியாக தற்போது ரயில்வே மற்றும் மேலக்கோட்டை ஊராட்சி இணைந்து ரயில்வே சுரங்கப்பாதையில் இரண்டு இடங்களில் மின்விளக்குள் அமைத்துள்ளன. இதனால், கும்மிருட்டாக காட்சியளித்த ரயில்வே சுரங்கப்பாதை தற்போது ஒளி வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால், 20 கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Electricity system motorists ,public ,Thirumangalam ,railway tunnel ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...