×

விபத்து இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கும் தாசில்தாரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திண்டுக்கல், மார்ச் 11: விபத்து இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கும் திண்டுக்கல் மேற்கு தாசில்தாரைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிரங்காடு கிராமம் ஒட்டக்கோவில்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கடந்த 2004ம் ஆண்டு கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மண் சரிவில் சிக்கினார். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டு கோமா நிலையில் கந்தசாமி சிகிச்சை பெற்று ஓரளவு குணமானார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கிணற்றின் உரிமையாளரிடம் உரிய இழப்பீட்டு தொகையை சட்டப்படி வசூல் செய்து தருமாறு கடந்த 2010ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இழப்பீடு தொகையை வட்டாட்சியர் பெற்றுத்தரவில்லை. உடனடியாக மாற்றுத்திறனாளி கந்தசாமிக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் செல்வநாயகம், மாவட்டச் செயலாளர் பகத்சிங் மற்றும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், கிணற்றின் உரிமையாளர் கருப்பையாவுக்கு ஜப்தி நோட்டிஸ் அனுப்பப்பட்டது. 3 தினங்களில் இழப்பீடு தொகையை வசூல் செய்து தருவதாக தாசில்தார் கொடுத்த உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Dissenters ,
× RELATED தாசில்தார் அலுவலகத்தில்...