×

பழநி அடிவாரத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் குடிமகன்கள் பொதுமக்கள் பீதி

பழநி, மார்ச் 11: பழநி அடிவாரத்தில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் போதை நபர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில் அடிவாரத்தில் உள்ள பாட்டாளி தெரு, குறும்பப்பட்டி, தில்லையடி வள்ளியம்மை தெரு, தெற்கு அண்ணா நகர், பொண்ணகரம், வெண்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சில்மிஷம் செய்வது, வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன் போன்றவற்றை எடுத்துச் செல்வது போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிவாரத்தில் உள்ள பல வீடுகளில் கழிப்பறைகள் வீட்டிற்கு வெளியேதான் அமைக்கப்பட்டுள்ளன. திருடர்களின் அச்சுறுத்தல் காரணமாக இரவு நேரங்களில் பெண்கள் கழிப்பறைக்குக்கூட செல்ல முடியாத அவலநிலைக்கு ஆளாகி
உள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தும் இந்நபர்கள் சாலையில் நடந்து செல்வோரை சராமரியாகத் தாக்கி, அவர்களிடமிருக்கும் பணம் மற்றும் உடமைகளை பறித்துச் செல்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 31வது வார்டு கிளைச் செயலாளர் கோபிநாத் கூறியதாவது: இரவு நேரங்களில் 2 மணியில் இருந்து 5 மணி அளவில் தனியாக இருக்கும் பெண்களின் வீட்டுக்கதவுகளை தட்டுவது, வெளியில் யாராவது வந்தால் ஆயுதங்களால் தாக்குவது, வீட்டின் முன்பகுதி விளக்குகளை சேதப்படுத்துவது, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிச் செல்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளன. அடிவாரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் செய்து விட்டோம். அடிவாரம் காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லை. இருக்கும் போலீசாரும் பழநி கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் ரோந்துப்பணிக்கு வருவதில்லை. எனவே, இரவு நேரங்களில் ஆண் காவலர்களை ரோந்துப்பணிக்கு நியமித்து பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பழநி சப்.கலெக்டரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

Tags : Citizens ,public ,foothills ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...