×

துப்புரவு தொழிலுக்கு படையெடுத்த பட்டதாரிகள்

கோவை, மார்ச். 11:  கோவை மாநகராட்சி சார்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 319 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை துப்புரவு தொழிலாளர்களுக்கான நேரடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் 549 துப்புரவு தொழிலாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை அள்ளுவது, சுகாதார பணிகளை மேற்கொள்ளுவது போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து காலியாக உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் மாநகராட்சி சார்பாக வரவேற்கப்பட்டன. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால்போதும் என மட்டும் கல்வி தகுதி குறிப்பிட்டிருந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாநகராட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சி மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டனர். எம்.இ., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., பி.எட். போன்ற பட்டதாரி இளைஞர்களும் இதில் கலந்துகொண்டதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதில் விண்ணப்பித்த மனுதாரர்கள் நேர்காணலின்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 549 இடங்களுக்கு 319 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 
இதில் 40க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யாமல் பட்டாதாரிகளை வேலைக்கு எடுப்பதா? எனக்கூறி கடந்த திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகளை துப்புரவு தொழிலாளர் வேலைக்கு எடுத்ததை குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது என்பது மட்டும்தான் கல்வி தகுதி. அதன் அடிப்படையிலும் இடஒதுக்கீடு அடிப்படையிலும் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? பட்டதாரிகளா? என பார்க்கவில்லை தமிழ் எழுத தெரியுமா? என பார்த்தோம் அவ்வுளவுதான்.அதன்பின் எஸ்.சி சமூகத்திற்கு 15 சதவீதம், எஸ்.சி.ஏ. ஆண்கள் 8, பெண்கள் 10 என இது போன்ற இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.

 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி வழங்குவது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.அதன் அரசாணை வரும்போது அவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும்’’ என்றார்.இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘துப்புரவு பணிக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போதுதான் பல பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. நேரடி நியமனம் என்பதாலும், இடஒதுக்கீடு அடிப்படை என்பதாலும், கல்வி தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால்போதும் என்கிற அடிப்படையினால் 40க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பலரும் தங்களது 10ம் வகுப்பு சான்றிதழ் (அட்டட்சேசன்) தான் சமர்ப்பித்துள்ளனர். பலர் முதுகலை பட்டபடிப்பு படித்து வருகின்றனர்’’ என்றார்.

Tags : Graduates ,
× RELATED அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு...