×

கோபி அருகே பரபரப்பு வீடுகளை சூழ்ந்த கழிவுநீரை அகற்ற கோரி மறியல்

கோபி, மார்ச் 11: கோபி அருகே உள்ள கூகலூரில் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. பேரூராட்சி பகுதி முழுவதும் உள்ள வீடுகளின் கழிவுநீர் இந்த குளத்திலேயே விடப்படுகிறது. கழிவுநீர் குளத்தில் கலப்பதாலும், அந்த பகுதியில் உள்ள கோழிக்கடைகளில் இருந்து கழிவுகள் குளத்தில் கொட்டப்படுவதாலும், குளம் நிரம்பி உள்ளது. குளத்து கழிவுநீர் வெளியேற வழியில்லாததால் வீடுகளின் கழிவுநீர் குளத்திற்கு செல்ல வழியில்லாமல், 50க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி உள்ள கால்வாயில் தேங்கியுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. குளத்து நீரை வெளியேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் பல ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால்,  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கழிவுநீரால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று கூகலூரில், கோபி - கூகலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகி தாமோதரன், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதுவரை குளத்து தண்ணீரை அப்புறப்படுத்தாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு மட்டும் வந்த அ.தி.மு.க. நிர்வாகியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், `சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை கலந்த குளத்து தண்ணீரால் அவதிப்பட்டு வருகிறோம். பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்  மறியலில் ஈடுபட்டோம். உடனடியாக குளத்து நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என்றனர்.

Tags : Gopi ,houses ,
× RELATED மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!!