×

317 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

ஊட்டி, மார்ச் 11: ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் மாதாந்திர ஓய்வூதியம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், மூளை முடக்கு வாத நாற்காலி, கருப்பு கண்ணாடி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் மிகாலும், 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. இதனை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

 இந்நிகழ்ச்சியில் 224 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், 8 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் வங்கி கடன் மானியம், 25 பேருக்கு கூடுதல் பராமரிப்பு உதவித்தொகை ரூ.75 ஆயிரம் மதிப்பிலும், ஆவின் பாலகம் அமைத்திட 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ஒருவருக்கு திருமண உதவித்தொகையாக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் 6 பேருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 4 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 600 மதிப்பில் மூளை முடக்கு வாத நாற்காலிகள், 29 பயனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 14 பயனாளிகளுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேசும் கைப்பேசிகள், 4 பயனாளிகளுக்கு ரூ.2,960 மதிப்பில் நகரும் உந்து வண்டி (மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு) என மொத்தம் 317 பயனாளிகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Persons ,
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி