×

கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு 20 சதவீதமாக உயர்வு

கோவை, மார்ச் 10: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பகால சர்க்கரை நோய் தினம் நேற்று நடந்தது. இதில், கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன், மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் உள்பட அனைத்து துறை மருத்துவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பகால சர்க்கரை ேநாய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனையின் நீரிழிவு நோய் துறைத்தலைவர் டாக்டர் வெண்கோ ஜெயபிரசாத் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி கர்ப்பகால சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் கருவுற்ற தாய்மார்களில் 2 முதல் 3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இது தற்போது 15-20 சதவீதமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் ஒரு தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

பெண் கருவுற்றவுடன் அவருக்கு சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு முறையாவது சுகர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த பிரச்னை பொதுவாக 6வது, 7வது மாதத்தில்தான் ஏற்படும். இதனால், கர்ப்பகாலத்தில் தாய், சேய் இருவருக்கும் பிரச்னை ஏற்படும். குழந்தை முதிர்ச்சி அடையாத நிலையில் இருக்கும். சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குழந்தைக்கு ஏற்படும். உறுப்புகள் வளர்ச்சியும் பாதிக்கும். தற்போது உள்ள உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் காரணமாக கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கருவுற்ற தாய்மார்கள் கருவுற்ற நாள் முதல் முறையாக சுகர் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்