×

ஆதி திராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு புதிய கட்டிடம்

கோவை, மார்ச் 11: கோவையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதி  திராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தாட்கோ  மூலம் ரூ.34 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை,  பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் டாக்டர்  அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.  இங்கு கோவை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்கி  படிக்கின்றனர். வளாகத்திலுள்ள 2 விடுதிக்கட்டிடங்கள் ஒன்றில் 214  மாணவர்கள், மற்றொன்றில் 85 மாணவர்களும் தங்கியுள்ளனர். இதில் 214 மாணவர்கள்  தங்கியுள்ள கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது  இக்கட்டிடம் போதிய உறுதித்தன்மை இல்லாமல் பலமிழந்து காணப்படுகிறது. தவிர  கட்டிடங்களில் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்தும், உடைந்தும் காட்சியளிக்கிறது.  இதனால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில்  கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு புதிய கட்டிடம் அமைத்துத்தர வலியுறுத்தி ஆதி  திராவிடர் நலத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தாட்கோ  நிறுவன செயற்பொறியாளர் மூலம் விடுதி கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டு, புதிய  கட்டிடம் கட்டுவதற்கு ரூ.34 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு  அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாலசுந்தரம்  சாலையிலுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பழையக் கட்டிடத்தில்  16 அறைகளில் 214 மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் நலன்  கருதி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தாட்கோ மூலம்  கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி பெற்றவுடன் மாணவர்களுக்கு கோடை  விடுமுறையின்போது பழையக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய விடுதிக்கான  பணிகள் தொடங்கப்படும். 2 தளங்களுடன் தலா 10 அறைகளுடன் அமைக்க  வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு மாற்று இடமாக வளாகத்திலுள்ள மற்றொரு  விடுதிக்கட்டிடமும், குனியமுத்தூர் பகுதியிலுள்ள விடுதிக் கட்டிடமும்  ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Adi Dravidar College Students Hostel ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...