×

காதல் திருமணம் செய்த மனைவியை காரில் கடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு

ஈரோடு, மார்ச் 11: பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த தனது மனைவியை அவரது உறவினர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது கணவர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் மனு அளித்தார்.  திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் காவிலிபாளையம் 1வது வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நவநீதகிஷ்ணன் (26). இவரும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயிகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெளனிகா (24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந் நிலையில், தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் நேற்று எஸ்பி அலுவலகத்தில் நவநீதகிருஷ்ணன் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறேன். நானும், மௌனிகாவும் பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு மௌனிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 14ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். இதுதொடர்பாக திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருவீட்டாரிடமும் வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னையை முடித்து வைத்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி மெளனிகாவின் சித்தப்பா திருமுருகன் போனில் இருந்து பேசியவர்கள் மௌனிகாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பெருந்துறை கேஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதை நம்பி நாங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு காரில் வந்தவர்கள் என்னையும், எனது மனைவியையும் தாக்கினர். பின்னர், எனது மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்து விட்டு காரில் கடத்தி சென்று விட்டனர். இதுதொடர்பாக பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. எனது மனைவி மௌனிகா உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.  கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : relatives ,SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்