×

மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சி மார்ச் 21ல் துவக்கம்

ஈரோடு, மார்ச் 11: ஈரோட்டில் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கோவை மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவிய, சிற்பங்களை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த துறையின்கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்ப கல்லூரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்ப கலைக்காட்சி நடத்துதல், தனிநபர், கூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. கலை பண்பாட்டுத்துறையின் 7 மண்டலங்களிலும் ஆண்டுதோறும் ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத்துறையின் கோவை மண்டலம் சார்பில் நடப்பாண்டில் மார்ச் 21 மற்றும் 22ம் தேதிகளில் கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறந்த கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த கண்காட்சியில் பங்கு பெற விருப்பமுள்ள ஓவிய, சிற்ப கலைஞர்கள் கண்காட்சியில் இடம் பெறத்தக்க கலை படைப்புகளை அனுப்பலாம்.

இந்த படைப்புகளை வரும் 15ம் தேதிக்குள் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, அரசு இசைக்கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி, கோவை-641050 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகைப்படங்களின் அடிப்படையில் தேர்வு செய்த கலைப்படைப்புகள் உரிய கலைஞர்களிடம் பெறப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படும். சிறந்த கலை படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : exhibition ,
× RELATED சென்னையின் முதல் பேனா கண்காட்சி!