×

போலீஸ்காரர்கள் தற்கொலை தடுத்து நிறுத்த வேண்டும்

சீர்காழி, மார்ச் 10: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும், வேலையை ராஜினாமா செய்வதும் அதிகரித்து வருகிறது.போராட்டங்களுக்கான பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தமிழக போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக இதுவரை 3 போலீஸ்காரர்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிருவர் வேலையே வேண்டாம் என்று ராஜினாமா செய்துள்ளனர்.ஈரோடு கவுந்தப்பாடி காவல்நிலைய போலீஸ்காரர் மோகன்குமார் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தனது குடும்பத்தினரை காப்பாற்ற வேலையை ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே இதேபோல சில போலீஸ்காரர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், செஞ்சி காவல் நிலையத்தை சார்ந்த சரவணன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய மூன்று போலீஸ்காரர்கள் பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள். இவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இவர்களது மரணத்திற்கான காரணங்கள் குறித்து அவர்களது குடும்பத்தார் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.பொதுவாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களினால் போலீஸ்காரர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அத்தியாவசியமான காரணங்களுக்கு கூட விடுமுறை மற்றும் ஓய்வு கிடைப்பதில்லை. இதன் காரணமாக போலீஸ்காரர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் காவல் துறையினர் தாக்கப்படுவதும், அவமானப் படுத்தப்படுவதும் தொடர்கிறது.

காவல்துறையின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த வேண்டும். போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஊர்காவல் படை மற்றும் துணை ராணுவப்படையினர் உதவியுடன் காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படும் போராட்டங்களை ஆரம்ப நிலையிலேயே தடை செய்ய வேண்டும். போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை வழங்கிட வேண்டும்.
கலவரங்களில் காயமடைந்துள்ள போலீஸ்காரர்களுக்கு தகுந்த மருத்துவ உதவி மற்றும் இழப்பீடு வழங்கிட வேண்டும், பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை