×

சர்வதேச மகளிர் தினம் காரைக்காலில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்கால், மார்ச் 10: மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் நகராட்சி மாநாட்டு கூடத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குனர் சத்யா, காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ராஜேஸ்வரி, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் மலைக்கனி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா, ஹேண்டு அண்டு ஹேண்டு தனியார் நிறுவன பிரமுகர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாலின சமத்துவம், குழந்தைகளை பாதுகாக்கும் முறை மற்றும் அவர்களை கல்வியில் எவ்வாறு உயர்த்த வேண்டும் என்ற கருத்துகளை சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்னர், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இறுதியில், நகராட்சி சுய உதவிக்குழு மற்றும் கூட்டமைப்பினர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பித்தல் போன்ற பதாதைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, மீண்டும் நகராட்சியை வந்தடைந்தனர்.

Tags : International Women's Day Karaikal Girl ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்