×

நிலத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

திருச்சி, மார்ச்.10: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருச்சி துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த துரைசாமி (65) என்பவர் கோரிக்கை மனுவை கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் கூட்ட மன்றம் முன் சென்ற அவர், திடீரென்று தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவர் கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது சகோதரர் சூசைமாணிக்கம் எங்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை எனக்கு பிரித்து வழங்கினார். துவாக்குடியில் உள்ள எனக்கு சொந்தமான அந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் மற்றும் ஜென்மராக்கினி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து, அந்த நிலம் தங்களுடையது என்று அடித்து மிரட்டுகின்றனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. போலி பத்திரம் மூலம் எனது நிலத்தை பறிக்க முயற்சிக்கும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த திருவெறும்பூர் தாசில்தாருக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். தொடர்ந்து துரைசாமியை போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED கொரோனாவால் பலர் வேலை இழப்பதால் மன...