×

உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்ததால் படிப்புக்கு வந்தது இடையூறு

திருச்சி, மார்ச் 10: திருச்சி ரங்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த உதயகுமார் மகள் சந்தியா திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சி பட்டத்தில் பிஎச்.டி படிக்கச் சென்ற என்னிடம் உயிர் தகவலியல் துறை உதவி பேராசிரியர் ஒருவர், அவரது மனைவி முதுகு தண்டுவடம் தேய்மானம் ஆகிவிட்டதாகவும், அதனால் அவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர் என அவரது மனைவி மீது குறை கூறி என்னுடைய கைகளை பற்றி இழுத்து ஆபாச வார்த்தைகளை பேசி, பாலியல் வற்புறுத்தல் மற்றும் அத்துமீறிய செயல்களில் ஈடபட முயற்சித்தது தொடர்பாக கடந்த ஜனவரி 25ம் தேதி துணைவேந்தர் மணிசங்கரிடம் புகார் மனு அளித்தேன். அதன் பெயரில் பல்கலைக்கழக மனுக்குழு மூலமாக என்னிடம் பிப்ரவரி 3ம் தேதி மற்றும் 15 ஆகிய நாட்கள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட எனக்கு ஆராய்ச்சி படிப்பை தொடர உதவும் விதமாக பயோகெமிஸ்ட்ரி துறை தலைவரை அழைத்து எனக்கு பிஎச்.டி கெய்டாக இருக்கும்படி கூறினார். மறுநாள் என்னிடம் தவறாக நடக்க முயன்ற உதவி பேராசிரியரின் மனைவி பயோகெமிஸ்ட்ரி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதனால் நான் பிஎச்.டி படிப்பதில் இடையூறு ஏற்படும் என்று துறைத்தலைவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக துணைவேந்தரிடம் கூறியபோது, என்னை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவுவதாக கூறினார். வேறுவழியின்றி நான் இது குறித்து திருச்சி போலீஸ் எஸ்.பியிடம் புகார் அளித்தேன். எஸ்பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் என்னிடம் தவறாக நடக்க முயன்ற உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. பல்கலைத்தரப்பிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே என்னிடம் தவறாக நடக்க முயன்ற உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது படிப்பை தொடர உதவ வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : disruption ,assistant professor ,
× RELATED தமிழகத்தில் 50 நாட்களில் கொரோனா...