×

பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி பெற்றோர், உறவினர் திடீர் சாலை மறியல்

லால்குடி, மார்ச் 10: லால்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த பள்ளி மாணவியின் சாவில் மர்மம் உள்ளது என கூறி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரை அடுத்த அயன் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகள் ரேகா (16). இவர் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள வடுகர்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வந்து விடுமுறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 19ம்தேதி காலை பள்ளி நிர்வாகத்திடமிருந்து ரேகாவின் தந்தைக்கு போன் செய்துள்ளனர். உங்களது மகள் ரேகா இரவு சிறப்பு வகுப்புகள் முடிந்து விடுதிக்கு திரும்ப வரவில்லை என தெரிவித்துள்ளனர். உடனே தனது கிராமத்திலிருந்து வடுகர்பேட்டையில் உள்ள பள்ளி மற்றும் அந்த பகுதியில் அவரை தேடி வந்த நிலையில் மாலை வரை கிடைக்காததால் கல்லக்குடி போலீசில் தந்தை நடராஜன் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு கல்லக்குடி காவல் நிலையத்திலிருந்து, ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ள மாணவி உங்கள் மகள்தானா என்நு வந்து பாருங்கள் என ரேகாவின் தந்தையிடம் தகவல் தெரித்துள்ளனர்.

பின்னர் அவர் வந்து உறுதிசெய்த பின் விருத்தாசலம் ரயில்வே போலீசார் ரேகாவின் உடலை கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை ரேகாவின் தந்தை நடராஜன் மற்றும் உறவினர்கள் எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. விடுதி வார்டன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி முன்பு திருச்சி-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு லால்குடி டிஎஸ்பி., ராஜசேகர், எஸ்ஐ ராமலிங்கம், சதீஷ்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளியில் தற்போது அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு பள்ளி நிர்வாகத்தின் மீதும், விடுதி வார்டன் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Parents ,school administration ,
× RELATED பள்ளிகளை திறப்பது குறித்து...