×

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்

திட்டக்குடி, மார்ச் 10:  வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து விவசாயத்திற்கு பாசன நீரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.  திட்டக்குடி அருகே  கீழ்செருவாயில் மிகப் பெரிய ஏரியான வெலிங்டன் ஏரி மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரி 1876ல் கட்டப்பட்டது. இதன் முழு கொள்ளளவு 2580 மில்லியன் கனஅடி. நீர் தேக்கத்தின் நீர் மட்ட உயரம் 29.72 அடி. இவற்றின் பாசன தலைப்பு மதகுகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களுக்கு உட்பட்ட 63 கிராமங்களில் உள்ள 23 ஏரிகள் நேரடி பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் 24059 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதன் கீழ்மட்ட காவல்வாய் மூலம் 13 கிமீ தூரத்திற்கு 9209 ஏக்கர் நிலமும், மேல்மட்ட காவல்வாய் மூலம் 39 கிமீ தூரத்திற்கு 14850 நிலமும் பாசன வசதி பெற்று விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

   தற்போது இந்த ஏரியில் 15.40 அடி தண்ணீர் உள்ளது. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2020 மார்ச் 6ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் 19 நாட்களுக்கு 250 கன அடி வீதமும் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன நீர் திறந்துவிடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இதில் கலந்து கொண்டு பாசன வாய்க்காலில் மலர்களை தூவி பாசன நீரை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2015ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 250 கன அடிநீர் 19 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திகொள்ள வேண்டும். இதன் மூலம் 23 ஏரிகள் பாசன வசதி பெற்று குடிநீர்பிரச்னை, நிலத்தடி நீர்மட்டம் பெருகும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

   கொரோனா வைரஸ் கடலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கிடையாது. பொதுமக்கள் தினமும் கைகளை சுத்தமாக கழுவவேண்டும். பொது இடங்களில் இருமல், தும்பல், வந்தால் கையை முகத்தில் கைக்குட்டைகளை பயன்படுத்தி இரும வேண்டும். வசிக்கும் இடத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை விமானநிலையத்தில் உரிய பரிசோதனை செய்து தான் அனுப்புகின்றனர். பொதுமக்களாகிய நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவில் விருத்தாலசம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், விருத்தாசலம் செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர்கள் சோழராஜன், கீழ்ச்செருவாய் ஊராட்சி மன்ற தலைவலர் ரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் விவசாய சங்க தலைவர்கள் கொத்தட்டை ஆறுமுகம், வேணுகோபால், பொன்னுசாமி, மருதாசலம், காவல்துறை ஆய்வாளர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Wellington ,reservoir ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு