×

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

முஷ்ணம், மார்ச் 10:  ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு இவர்களுக்கு ரூ.2,700 மட்டுமே சம்பளத்தை உயர்த்தி கொடுத்துள்ளது. 9வது ஆண்டு தொடங்கிய நிலையில் 16,549 பேரில் தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி கருணை மனுக்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர். விவசாயிகளை பாதுகாத்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழ்மை நிலையில் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, வரும் பட்ஜெட் கல்வி மானிய கோரிக்கையில், ஊதிய உயர்வுடன் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டி, கவன ஈர்ப்பு கூட்டங்களை தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கடலூர் மாவட்டம் முஷ்ணத்தில் உள்ள இச்சங்கத்தின் மாநில மையத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் கடலூர் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சத்யராஜ் வரவேற்புரை ஆற்றினார். சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது, பகுதி நேர ஆசிரியர்கள் சார்பில் தினமும் அரசுக்கு அனுப்பும் பணி நிரந்தரம் வேண்டும் என்ற கருணை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பட்ஜெட் கூட்ட தொடரில் அரசு அறிவிப்பு வெளியிட தீர்மானம் மூலம் கேட்டுக் கொண்டனர்.அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன், கர்ணன், ராஜா, கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜ்மோகன் மயூரவேலன், புனிதா, கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags : teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்