×

அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம், மார்ச் 10: திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த அரிபாபு மனைவி கிரிஜா(22). முதல் பிரசவத்திற்காக கடந்த 27ம் தேதி அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிரிஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்பு அறுவை சிகிச்சையில் கிரிஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கிரிஜாவுக்கு தொடர்ந்து ரத்தம் வெளியேறி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பணியில் இருந்த மருத்துவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிகிறது.பின்பு தாமதமாக மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீதும், பணியில்இருந்த மருத்துவர்கள் மீதும் உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க சிபிஎம் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு ராமமூர்த்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கோதண்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இன்பஒளி, மேல்பாக்கம் சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் திமுகவை சேர்ந்த நாராயணசாமி, பலராமன், சிவானந்தம், சம்பத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவக்குமார், கார்த்தி, தேமுதிகவை சேர்ந்த முருகன், ராஜா, ராஜ், மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கிரிஜா உயிரிழப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேசினர்.


Tags : parties ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...