×

கல் கொண்டு வீசினாலும் கல்வி பயிற்றுவித்த ஆசிரியை

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் தெரியுமா? நீண்ட நேரம் யோசிக்க வேண்டும். சாவித்திரி பாய் புலே என்பவர்தான் அவர். அதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா? ஆசிரியர் பணியை மேற்கொள்வதற்காக, அவர் பட்ட அவமானங்களே இன்று வரை அவரை புகழின் உச்சியில் ஏற்றி வைத்திருக்கிறது. இன்று அவரது 123வது நினைவு தினம்.அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் கிராமத்தில், 1831, ஜனவரி 3ம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார் சாவித்திரி பாய். அன்றைய கால வாழ்க்கை முறைப்படி சாவித்திரி பாய்க்கு அவரது வீட்டில், 13 வயதுடைய ஜோதிராவ் புலேவுக்கு மணமுடித்து கொடுத்தனர். இளம் வயதிலேயே உயர்ஜாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கியது, தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராடியவர் ஜோதிராவ் புலே. தனது போராட்டத்தில் மனைவி சாவித்திரியையும் இணைத்துக் கொண்டார். முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிராவ் புலே. முதலில் தனது மனைவிக்கு கல்வி பயிற்றுவித்தார். பின்னர் இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பயிற்றுவித்தனர். 1847ல் ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினர்.

அவர்களின் லட்சியமே பெண் குழந்தைகளுக்காக பள்ளி துவங்குவது தான். அதை பலத்த போராட்டத்திற்கு இடையே 1848ம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேயில் தொடங்கினர். அதில் விதவை பெண்களின் குழந்தைகள், ஒடுக்கப்பட்டவர்களின் பெண் குழந்தைகள் படித்தன. முதலில் 9 குழந்தைகளுடன் பள்ளி துவங்கியது. அந்த பள்ளிக்கு சாவித்திரி பாய் புலே ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமையை பெற்றார். சாவித்ரி பாய் புலே கல்வி வழங்கியதை அன்றைய பழமைவாதிகள், உயர்சாதியினர் விரும்பவில்லை. இதனால் சாவித்திரி பணிக்கு செல்லும்போது கல், அழுகிய பொருட்களை கொண்டு வீசினர். இதை கணவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாவித்திரி. ‘‘அழுக்கான ஆடைகளுடன் நீ கல்வி கற்பிக்க முடியாது. அப்படித்தானே... போகும்போது பழைய ஆடைகளை அணிந்து செல். அங்கு சென்று புதிய ஆடைகளை அணிந்து கொள்’’ என்கிறார் ஜோதிராவ். அவ்வாறே பள்ளிக்கு செல்லும்போது, கூடுதலாக ஆடைகளை எடுத்துச் சென்றார். கற்கள் மற்றும் அழுகிய பொருட்களை வீசுவதால், ஆடை அழுக்காகும். அதை பள்ளிக்கு சென்று மாற்றி விட்டு, வேறு ஆடையை அணிந்து கல்வி பயிற்றுவிப்பார் சாவித்திரி.

அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் தர மாட்டார்கள். டீக்கடையில் கூட இரட்டைக்குவளை முறை உண்டு. கணவரை இழந்த பெண்களுக்கு ெமாட்டை எடுக்கும் பழக்கம் இருந்தது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராடினர் ஜோதிராவ் - சாவித்திரி தம்பதி. பலருக்கு விதவை மறுமணமும் செய்து வைத்தனர்.சாவித்திரிபாய் பல அற்புதமான கவிதைகளையும் எழுதி உள்ளார். 1852ல் இவர் தொடங்கி வைத்த ‘பெண்கள் சேவை மையம்’ மனித உரிமைகளை மீட்டெடுக்கும் மையமாக திகழ்ந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளேக் நோயால் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வெளிநாட்டில் இருந்த தனது மகனை சாவித்திரி பாய் இந்தியாவிற்கு திரும்ப வைத்து, அனைவருக்கும் சிகிச்சை அளிக்க உதவினார். பெண்கள் கல்வியறிவு வேண்டும். சமூகத்தில் உயர வேண்டுமென்பதற்காகவே, இறுதி வரை பாடுபட்ட சாவித்திரி பாய் புலே, 1897ம் ஆண்டு, மார்ச் 10ம் தேதி காலமானார்.

Tags : teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...