×

தேவதானப்பட்டியில் வேட்டை நாய்களை திருடும் கும்பல்

தேவதானப்பட்டி, மார்ச் 10: தேவதானப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் வேட்டை நாய்கள் திருடப்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் தோட்டப்பகுதியில் காவலுக்காகவும், இரவு நேரத்தில் ஆட்டு கிடைகளுக்கு பாதுகாப்பிற்கும் வேட்டைநாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் எந்த ஒரு பொருளும் திருடு போகாமல் இருக்க வேட்டை நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியில் வேட்டைநாய்களே திருடுபோவது வினோதமாக இருக்கிறது. இரவு நேரத்தில் சரக்கு வேனுடன் நாய்கள் திருடும் கும்பல் செல்வதாக கூறப்படுகிறது. இவர்கள் சினிமாவில் வருவதுபோல் மயக்கமருந்து கலந்து ரொட்டிகள், பிஸ்கட், தின்பண்டங்களை கொண்டு செல்கின்றனர். மயக்கமருந்து கலந்த பொருட்களை நாய்கள் தின்றவுடன் மயக்கத்தில் கால்களை கட்டி திருடி சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. திருடப்படும் வேட்டைநாய்கள் ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.

கெங்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வேட்டைநாயை காணவில்லை என ஆண்டிபட்டி பகுதியில் தேடி ஒரு தோட்டத்திற்கு சென்றபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு வந்து கொஞ்சியுள்ளது. அதிர்ந்து அந்த விவசாயி நாயை பார்த்த போது அது அவரது நாய்தான். என்ன கொடுமை என்றால் அந்த நாய் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. அதற்கு கருப்பு நிற ‘டை’ அடித்து நாயை கருப்பு நிறமாக மாற்றியுள்ளனர். விசாரித்ததில், ஒரு கும்பல் அவரிடம் இந்த நாயை விற்றது தெரியவந்தது. அவரும் கருப்புநிற நாய் என நம்பி வாங்கி ஏமாந்துள்ளார். பின்னர் தோட்ட உரிமையாளரிடம் பேசி தனது நாயை வாங்கி வந்துள்ளார். நாய்கள் திருடு தொடர்பாக 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே தேவதானப்பட்டி பகுதியில் வேட்டை நாய்கள் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், திருடர்கள் வழக்கமாக பொருட்களைதான் திருடுவார்கள். ஆனால் எங்கள் பகுதியில் தற்போது வேட்டை நாயை திருடுவதை ஸ்டைலாக கொண்டுள்ளனர். பொருட்களை பாதுகாக்கதான் நாய்களை வளர்க்கிறோம். அந்த நாய்களையே திருடிச் சென்றால் எதை வைத்து காவல் காப்பது. போலீசார்தான் அந்த கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Gang ,robbers ,Devadanapatti ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை